பிரிவின் வலியிலிருந்து………
வருடங்கள் கடந்த பின்னும்
உன் நினைவுகள்
என்னைத் துரத்தியபடியே…
நீ பிரிந்து போன
கடைசிக் கணங்கள்தான்
நினைவின் இடுக்குகளில்
கண்ணீராய்க் கசிகிறது ….
நீ
தனித்திருத்தல் அறியாத உயிர்
என்பது ஒரு புறம்
என்னோடு வளர்ந்தவன்
என்பது இன்னொரு புறம்
இருந்தும்
உன்னையும் என்னோடு
அழைத்து வர முடியாமல் போனது
அன்று
அகதி வாழ்வில்
ஊர் பிரிந்த பின்னும்
நிச்சயமில்லாத பிச்சை உயிரை
அடி மடியில் கட்டியபடி
ஒரு வாரம் கழித்து
உனக்காக ஊர் நுழைந்தேன்….
தனித்திருத்தலின் வலி பொறுக்காது
தூரத்தில் என்னைக் கண்டதும்
ஓடிவந்து பாய்ந்து நகம் பதித்தாய்
மொழி பெயர்க்காத
உன் மொழியில்
அனுங்கி அனுங்கி
ஏதோ சொன்னாய்
வாலை ஆட்டி ஆட்டி முனகினாய்….
ஒட்டிய வயிறும்
பூளை வடிந்த கண்களும்
உனது தனிமையை
தாமதமின்றியே உரைத்தது எனக்கு……..
தாமதிக்க முடியாத நிமிடங்களில்
கல்லும் நெல்லுமாய்
அவிந்தும் அவியாமலும் உணவளித்தேன்
அதுவே
நான் போடும்
கடைசிச் சாப்பாடு என்பதறியாமல்
நாக்கு வெந்து போகத் தின்று முடித்தாய்
உமிழ் நீர் தீரமட்டும் நக்கி நக்கி
என்னை ஈரப்படுத்தினாய்……
யாருமில்லாது சூனியமாய்க் கிடக்கும்
ஊரில் எப்படி நான் மட்டும்
என்னையும்
அழைத்துச் செல் என் எஜமானே என்று
உன் ஊழையிடலும் அனுக்கமும்
சொல்லாமல் சொல்லியது என்னிடம்
எப்படி முடியும்
நாங்களே அகதி முகாமில்
அவியாத சோற்றுக்கு வரிசையில் நிற்கையில்
நீயும்
எப்படி எங்களோடு
அதனால்
மனமின்றிப் பிரிந்தேன்
பாதி வழித் தூரம்
நாக்கிழைக்க ஓடிவந்து திரும்பினாய்
அந்தக் கடைசிக் கணங்கள்தான்
இன்னும் என்னோடு …..
என்னைச் சுற்றிச் சுற்றி வரும்
பிரிய நாய் குட்டியே
இன்று இறந்து போயிருப்பாய்
உன் மரணம்
உன் ஊரில் அந்தப் பொன்னிலத்தில்
நிகழ்ந்து போனது
மானமிழந்து நீ நிலம் பிரிந்துபோனதில்லை
அதனால்தான்
உன்னை நினைக்கும்போதெல்லாம்
கொஞ்சமாவது ஆறுதலடைகிறேன்
No comments:
Post a Comment